Tuesday, September 07, 2010

வரதட்சணையும் வராத அர்ச்சனையும்

தலையில் வெள்ளி எட்டிப்பார்த்தபோது
பித்தத்தால் இளநரை என்றேன்
தசையில் சுருக்கங்கள் கண்டபோது
சுத்தமில்லாத சென்னை என்றேன்

வரதட்சணை கொடுக்க இயலாத அப்பா
உனக்கு எத்த வரன் இன்னும் அமையல என்றார்
வரனோ வேலையோ தேட முயலாத தம்பி
உனக்கு அப்புறம்தான் நானா என்றான்

அலுவலகத்தில் ஆண் ஒருவர்
இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார்
வலுவிழந்த என் பாட்டி கூட
செல்லாக்காசு என்று ஏசுகிறார்

மெட்டியும் தாலியும் பாரம் என்று
வீட்டில் கழட்டி வைக்கும் தோழி
சில்லறைக்கு அலையும் ஆண் சமுதாயத்தால்
கல்லறை வரை மணமேடை கனவாகிப்போன

என் போன்ற முதிர்கன்னிகளிடம் கேளுங்களேன்
இல்லறம் எத்தனை சுகமானதென்று
மஞ்சள் எவ்வளவு மதிப்பானதென்று
மெட்டி எவ்வளவு அழகானதென்று